
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான தியோதர் கோப்பை ஒருநாள் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 14ஆவது போட்டியில் கிழக்கு மண்டலம் மற்றும் மேற்கு மண்டல அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
புதுச்சேரியில் நடைபெற்ற இப்போட்டியில் கிழக்கு மண்டல அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் அபிமன்யூ ஈஸ்வரன் 38 ரன்களுக்கும், உட்கர்ஷ் சிங் 50 ரன்களிலும், விராட் சிங் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ரிசவ் தாஸ் 3 ரன்களிலும், கேப்டன் சவுரப் திவாரி 13 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, கிழக்கு மண்டல அணி 157 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
அப்போது களமிறங்கிய ரியான் பராக் அதிரடியாக பல சிக்சர்களை விளாசி தள்ளினார். தேவைக்கேற்ப பவுண்டரியும் சிக்சர்களும் பறக்க, கிழக்கு மண்டல அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. எதிர்முனையில் நின்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், ரியான் பராக் சிறப்பாக ஆடி 68 பந்துகளில் சதம் விளாசி மிரட்டினார். அதில் 6 பவுண்டரியும், 5 சிக்சர்களும் அடங்கும்.