
29 வயது சோலாங்கி, இதுவரை 25 முதல்தர ஆட்டங்களில் விளையாடி 6 சதங்களுடன் 1679 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த 2020-21 சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் ஹரியாணாவுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் கடைசி 3 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து (6,4,6) பரோடா அணிக்குப் பரபரப்பான முறையில் வெற்றியை அளித்தார். 46 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 71 ரன்கள் எடுத்தார்.
கடந்த பிப்ரவரி 11 அன்று கட்டாக்கில் பரோடா அணியினருடன் கரோனா தடுப்பு விளையத்தில் சோலாங்கி இருந்தபோது அவருடைய மனைவிக்குப் பெண் குழந்தை பிறந்த தகவல் கிடைத்தது. ஆனால் பிப்ரவரி 12 அன்று நள்ளிரவில், முந்தைய நாள் பிறந்த குழந்தை இறந்துவிட்டதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனடியாக ஊருக்கு விரைந்தார் சோலாங்கி. இதனால் பெங்கால் அணிக்கு எதிரான பரோடா அணியின் முதல் ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை.
ஊருக்குச் சென்ற சோலாங்கி, அடுத்த 5ஆவது நாளில் மீண்டும் அணியினருடன் இணைந்தார். சண்டிகருக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் விளையாடத் தயாராக இருந்தார். தனது மகளை உயிருடன் ஏந்த வாய்ப்பு கிடைக்காத துயர நிலையிலும் அணிக்காகப் பங்களிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். 5 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு சண்டிகருக்கு எதிராக விளையாடி ஆட்டத்தில் சதமடித்தார் சோலாங்கி.