
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி அந்த அணிக்கு எதிராக மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை முழுமையாக கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி, நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியிலும் அபார வெற்றியைப் பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலை வகித்துவருகிறது.
இத்தொடரில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டெவான் கான்வே விரலில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவு காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார். டி20 தொடரின் போது விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த டெவான் கான்வே காயமடைந்து போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். அதன்பின் அவருக்கு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது உறுதிசெய்யப்பட்டது.
அவரது காயம் குறித்து அந்நாட்டின் கிரிக்கெட் வாரிய மருத்துவர்கள் வெளியிட்ட அறிக்கையில், டெவான் கான்வேவின் காயம் குணமடைய நீண்ட காலம் எடுக்கும் என்பதால், ஓரிரு நாளில் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், காயம் குணமடைய 8 வாரங்கள் ஆகலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இச்செய்தியானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்பெடுத்தியுள்ளது.