
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் எஸ் தோனி பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தான், கிரிக்கெட் அகாடமி ஒப்பந்தம் தொடர்பாக ஆர்கா ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட்டின் அதிகாரிகள் இருவர் மீது கிரிக்கெட் வீரர் தோனி ராஞ்சியில் வழக்கு தொடர்ந்தார்.
ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா விஸ்வாஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகளவில் கிரிக்கெட் அகாடமியை நடத்துவதற்காக கடந்த 2017 ஆம் ஆண்டு தோனியுடன் திவாகர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஆனால் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
ஆர்கா ஸ்போர்ட்ஸ் ஒரு உரிமைக் கட்டணத்தைச் செலுத்தவும், ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி லாபத்தைப் பகிர்ந்து கொள்ளவும் கடமைப்பட்டிருக்கிறது. அவை மதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. பலமுறை இது குறித்து கேட்ட போதிலும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.