
இப்போது இந்திய அணியில் ஏகப்பட்ட விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். இஷான் கிஷன், ரிஷப் பந்த், ராகுல், சஞ்சு சாம்சன், கே.எஸ்.பரத் உள்ளிட்டவர்கள் உள்ளனர். ஆனால், 2000ஆம் ஆண்டிலிருந்தே இந்திய அணி, ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் போன்ற ஒரு விக்கெட் கீப்பரைத் தேடிக்கொண்டிருந்தது. இதற்காக பலரையும் இந்திய அணித் தேர்வுக்குழு பரிசீலனை செய்ததில் கடைசியில் எம்எஸ் தோனி வாய்ப்பு பெற்றார்.
தோனி தன் கிரிக்கெட் கரியரில் டெஸ்ட் போட்டிகளில் வெளிநாடுகளில் அவரது கேப்டன்சியில் உதை மேல் உதை வாங்கியதைத் தவிர வீரராகவோ, விக்கெட் கீப்பராகவோ அவரிடம் குறை காண இடமில்லை என்றே அவரது ஆட்டம் இருந்தது. ஆனால், தோனி காலக்கட்டத்தில் அவருடைய ஆதிக்கத்தினால் பார்த்திவ் படேல், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட விக்கெட் கீப்பர்களுக்கு வேலை இல்லாமல் போயிற்று. தோனிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்கு அறிமுகப் போட்டியில் விளையாடியவர்.
தோனி 2004இல் செப்டம்பரில் ஒருநாள் சர்வதேச போட்டியில் அறிமுகமானார், பிறகு அதே ஆண்டின் இறுதியில் டெஸ்ட்டில் அறிமுகமானார். பாகிஸ்தானுக்கு எதிராக 148 ரன்களை விளாசித் தள்ளிய நீள் முடி வைத்திருந்த தோனி மெகா ஹிட் ஆகி விட்டார். ஒரே நாளில் சூப்பர் ஸ்டாராகவும் மாறிவிட்டார். அதாவது தனக்கு இந்திய அணியில் வாய்ப்பு வரும் நேரத்தில் தோனி மெகா ஹிட் ஆகிவிட்டார். ரசிகர்களிடத்தில் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார் என்று கூறுகிறார் தினேஷ் கார்த்திக்.