
இந்திய கிரிக்கெட்டில் தற்போது மிகவும் மூத்த வீரர்களில் முக்கியமானவர் தினேஷ் கார்த்திக். அவர் 18 வருடங்களாக உள்ளே வெளியே என இந்திய கிரிக்கெட் அணி உடன் தொடர்பில் இருந்தவர். நடந்து முடிந்த டி20 உலக கோப்பை அணியில் இடம் பெற்று தற்பொழுது அணிக்கு வெளியில் இருந்தாலும் இன்னும் ஓய்வு அறிவிப்பை வெளியிடாமல் இருக்கிறார். அதே சமயத்தில் தன்னை கிரிக்கெட் வர்ணனையில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு கிரிக்கெட்டில் இன்னொரு பரிணாமத்தில் ஜொலிக்கிறார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கிரிக்கெட் வர்ணனையாளராக பங்கு பெற்று, அதற்கு அடுத்து இந்திய அணி தொடர்ந்து இங்கிலாந்து அணி உடன் விளையாடிய டெஸ்ட் தொடரிலும் கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி பலரது பாராட்டை அங்கு பெற்றார்.
அதற்குப் பிறகு கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இவரை ஏலத்தில் வாங்க, ஒரு பினிஷர் ஆக நம்ப முடியாத வகையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து இந்திய அணியிலும் இடம் பிடித்தார். தற்பொழுது அணிக்கு வெளியே இருக்கும் இவர் கிரிக்கெட் வர்ணனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.