
இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது. இந்த சுற்றுப்பயணத்திற்கான முழு டெஸ்ட் அணியையும் அறிவிக்காமல் முதல் 2 போட்டிகளுக்கான இந்திய வீரர்களின் பட்டியலை மட்டுமே வெளியிட்டது. அதில் ரோஹித் சர்மா தலைமையில் 16 வீரர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக இளம் வீரரான துருவ் ஜுரேல்க்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இப்படி இந்திய டெஸ்ட் அணியில் முதல்முறையாக இவருக்கு வாய்ப்பு கொடுக்க என்ன காரணம்? இவர் யார்? என்ற தேடல் தற்போது அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. அந்த வகையில் தற்போது, 22 வயதாகும் துருவ் ஜுரேல் இந்திய அணிக்காக அண்டர் 19 போட்டிகளில் இருந்தே விளையாடி வருகிறார். அண்டர் 19 அணியின் துணை கேப்டனாக செயல்பட்ட அவர் அந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு மட்டுமின்றி தொடர்ந்து உள்ளூர் தொடரிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்தார்.
அடுத்தடுத்து உத்திர பிரதேச அணிக்காக ரஞ்சி தொடர், ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் என அசத்திய அவருக்கு கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடிய அவர் 172 என்கிற பிரம்மாண்ட ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடி 152 ரன்கள் மட்டுமே குவித்திருந்தாலும் பின் வரிசையில் களமிறங்கி தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் அனைவரையும் வியக்க வைத்திருந்தார். அவரது ஐபிஎல் செயல்பாடுகள் மற்றும் உள்ளூர் தொடர்களில் அவர் விளையாடும் ஆட்டத்தை பார்த்த இந்திய அணி நிர்வாகம் தற்போது இஷான் கிஷனுக்கு மாற்றாக அவரை தேர்வு செய்துள்ளது.