
பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று சண்டிகரில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியானது எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக அஷுதோஷ் சர்மா 31 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தொடக்கத்தில் தனுஷ் கோட்யனை தொடக்க வீரராக களமிறக்கி தவறு செய்ததால், ஆரம்பத்திலேயே ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறியது. இதனால் இப்போட்டியில் கடைசி வரை எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் கடைசி ஓவரில் ஷிம்ரான் ஹெட்மையர் அதிரடியாக விளையாடி இரண்டு சிக்ஸர்களை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த ஷிம்ரான் ஹெட்மையர் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசன் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்தது.