
2021ஆம் ஆண்டு கரோனா பரவலின் போது இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, இளம் வீரர்களை கொண்ட இரண்டாம் கட்ட இந்திய அணியினர் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அந்த அணிக்கு கேப்டனாக ஷிகர் தவான் செயல்பட்டார். அதனைத் தொடர்ந்து டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே ரோஹித் சர்மா கவனம் செலுத்தி வந்ததால், ஒருநாள் தொடர்களில் இரண்டாம் கட்ட இந்திய அணியே பங்கேற்று வந்தது.
அந்த அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக இருந்து இளம் வீரர்களை வழிநடத்தி வந்தார். ஆனால் அந்த அணியில் ஸ்ரேயாஸ் ஐயரை தவிர்த்து வேறு எந்த வீரருக்கும் தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், தீபக் சஹர் உள்ளிட்டோருக்கு போதுமான வாய்ப்புகளை இந்திய அணி வழங்கவில்லை. இதனால் அடுத்தக் கட்ட கேப்டனை உருவாக்குவதில் பிசிசிஐ சிரமங்களை சந்தித்து வருகிறது.
ஏனென்றால் ரோஹித் சர்மா, விராட் கோலி, புஜாரா, ரஹானே உள்ளிட்டோர் ஒரே வயதில் விளையாடி வருகின்றனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்விக்கு பின் இளம் வீரரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று கருதினாலும், டெஸ்ட் அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளே வழங்கப்படவில்லை என்பது தெரிய வந்தது. ரிஷப் பந்த் மட்டுமே ஒரே வாய்ப்பாக இருக்கிறார். இதனை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் திலீப் வெங்சர்கார் கடுமையாக விமர்சித்துள்ளார்.