BAN vs SL, 2nd Test: டெஸ்ட் போட்டியிலிருந்து பாதியில் விலகிய தினேஷ் சண்டிமால்!
குடும்பத்தில் ஏற்பட்ட அவசர மருத்துவ கரணத்தின் காரணமாக வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியிலிருந்து இலங்கை வீரர் தினேஷ் சண்டிமால் பாதியிலேயே விலகியுள்ளார்.
வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது முதல் இன்னிங்ஸில் 531 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் ஷாகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளையும், கலெத் அஹ்மத் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணி இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப் ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 178 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணி தரப்பில் அசிதா ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Trending
இதன்மூலம் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் முன்னிலைப் பெற்றது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 102 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. வங்கதேச அணி தரப்பில் ஹசன் மஹ்முத் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 455 ரன்கள் முன்னிலையுடன் இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடரந்த இலங்கை அணி 157 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது.
இதன்மூலம் வங்கதேச அணிக்கு 510 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி வங்கதேச அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிவருகிறது. இந்நிலையில் இப்போட்டிக்கான இலங்கை அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடித்து விளையாடி வந்த நட்சத்திர வீரர் தினேஷ் சண்டிமால் குடும்பத்தில் ஏற்பட்ட அவரச சூழ்நிலை காரணமாக இப்போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அணியில் இருந்து தினேஷ் சண்டிமால் 'குடும்ப மருத்துவ அவசரநிலை' காரணமாக உடனடியாக விலகியுள்ளார். இலங்கை கிரிக்கெட், அணி வீரர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்கள் ஆகியோர் தினேஷ் சண்டிமாலுக்கு தங்களது முழு ஆதரவை வழங்குவதுடன், அவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் தனியுரிமையை பொதுமக்கள் மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now