
இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் நேற்று பார்லில் உள்ள போலண்ட் பார்க்கில் நடைபெற்ற எஸ்ஏ20 லீக் போட்டியின் மூலம் ஒரு சிறப்பு சாதனையைப் படைத்தார். டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில், பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக் 15 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உள்பட 21 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியில் பங்காற்றினர்.
இந்நிலையில் இப்போட்டியில் தினேஷ் கார்த்திக் 22 ரன்களைச் சேர்த்ததன் மூலம், டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் எம்எஸ் தோனியை முந்தி ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 391 போட்டிகளில் 342 இன்னிங்ஸ்களில் விளையாடி 7432 ரன்களைச் சேர்த்து டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 7ஆம் இடத்தில் இருந்தார்.
ஆனால் தற்சமயம் தினேஷ் கார்த்திக் 409 போட்டிகளில் 361 இன்னிங்ஸ்களில் விளையாடி 7,451 ரன்கள் எடுத்து டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களைக் குவித்த இந்த வீரர்கள் பட்டியலில் தோனியை பின்னுக்கு தள்ளியுள்ளார். இப்போது இந்தப் பட்டியலில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா, சூர்யகுமார் யாதவ் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் தினேஷ் கார்த்திக்கு முன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.