மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ராவுஃபும் ஒருவர் - தினேஷ் கார்த்திக்!
இப்போது உலக கிரிக்கெட்டில் இருக்கும் சிறப்பான வெள்ளை பந்து கிரிக்கெட் வேகப்பந்துவீச்சாளர்களில் ஹாரிஸ் ராவுஃபும் ஒருவர் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி அடுத்த இரண்டு மாதத்தில் குறைந்தபட்சம் பாகிஸ்தான் அணியுடன் மூன்று போட்டிகளில் மோதுவது உறுதியாகியிருக்கிறது. எல்லாம் சரியாக அமைந்தால் இந்தியா அதிகபட்சமாக ஐந்து முறை மோதலாம். பல ஆண்டுகளாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேரடியான இரு நாடுகளுக்கு இடையேயான தொடர்களில் விளையாடாமல் இருக்கின்ற நிலையில், ஒரே ஆண்டில் ஐந்து போட்டிகளில் மோதிக்கொள்வதற்கு வாய்ப்பு இருப்பது என்பது இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய கொண்டாட்டமான விஷயம்.
இந்த போட்டிகள் குறித்து இந்தியர்கள் தரப்பில் பாகிஸ்தானை பார்க்கும்பொழுது பாபர் ஆசம், ரிஸ்வான், ஃபகார் ஸமான் என்று எந்த பேட்ஸ்மேன்கள் பற்றியும் பெரிய கவனம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் ஏறக்குறைய பெரும்பான்மையான இந்திய ரசிகர்களுக்கு ஷாகின் ஷா அஃப்ரிடி மீது ஒரு கவனம் இருந்தே தீரும். ஏனென்றால் அவரது பந்து வீச்சால் இந்திய அணிக்கு 2021 டி20 உலக கோப்பையில் பெரிய சேதத்தை உருவாக்கி இருக்கிறார்.
Trending
இந்த நிலையில் தற்பொழுது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் தி ஹெண்ட்ரெட் தொடருக்கான வர்ணனைக்கு தினேஷ் கார்த்திக் சென்று இருக்கிறார். இவர் ஏற்கனவே இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஆஷஸ் தொடரில் வர்ணனையாளராக செயல்பட்டார். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் குறித்து தினேஷ் கார்த்திக் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய தினேஷ் கார்த்திக், “ஹாரிஸ் ராவுஃப் சில காலங்களுக்கு முன்னால் டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அவர் லாகூர் களாந்தர்ஸ் கிளப் மூலம் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் அணி மற்றும் அகாடமியின் ஒரு அங்கமாக மாறி, பின்பு லீக் போட்டிகளில் விளையாடினார். பின்னர் பாகிஸ்தான் அணிக்கு தேர்வாகி அங்கு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இப்போது உலக கிரிக்கெட்டில் சுழன்று கொண்டிருக்கும் சிறப்பான வெள்ளை பந்து கிரிக்கெட் வேகப்பந்துவீச்சாளர்களில் இவரும் ஒருவர். குறிப்பாக இறுதி கட்ட ஓவர்கள் போது இவர் மிகவும் அபாயகரமானவர், சிறப்பானவர்” என்று கூறியிருக்கிறார்.
ஹாரிஸ் ராவுஃப் பாகிஸ்தான் அணிக்காக இதுவரை 1 டெஸ்ட் 22 ஒருநாள் மற்றும் 62 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். இவற்றில் முறையே 123 விக்கட்டுகள் கைப்பற்றிவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now