
ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ள 2022 டி20 உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் வலை பயிற்சிகளில் ஈடுபட்டு பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றனர். அவரது தலைமையில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனைக் இருதரப்பு தொடர்களிலும் வென்று உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் டி20 அணியாக சாதனை படைத்து இத்தொடரில் களமிறங்கும் இந்தியாவுக்கு சமீபத்திய ஆசிய கோப்பை தோல்வியும் கடைசி நேரத்தில் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் வெளியேறியதும் பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது.
இருப்பினும் குறைகளை சரி செய்துகொண்டு ஆஸ்திரேலியாவில் வெற்றி வாகை சூடுவதற்காக இந்திய அணியினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 23ஆம் தேதியன்று பரம எதிரியான பாகிஸ்தானை தன்னுடைய முதல் போட்டியில் இந்தியா சந்திக்கிறது. அதில் விளையாடும் 11 பேர் அணியை உறுதி செய்து விட்டதாக ஏற்கனவே கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்துள்ள நிலையில் விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டு முதன்மை விக்கெட் கீப்பராக தன்னை அடையாளப்படுத்தியுள்ள இளம் வீரர் ரிஷப் பந்த் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் இதுவரை பெற்ற 58 போட்டிகள் என்ற அதிகப்படியான வாய்ப்பில் ஒருமுறை கூட அனைவரது மனதிலும் நிற்கும் அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை.
மறுபுறம் ஒருகட்டத்தில் வர்ணனையாளராக அவதரித்ததால் கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட தினேஷ் கார்த்திக் தம்மால் உலக கோப்பையில் விளையாட முடியும் என்ற நம்பிக்கையுடன் ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்டு 3 வருடங்களுக்குப்பின் கம்பேக் கொடுத்து 37 வயதுக்குப் பின் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள், 2 ஆட்டநாயகன் விருதுகளை வென்ற இந்திய வீரராக சாதனை படைத்து அசத்தி வருகிறார். இருப்பினும் சூர்யகுமார் யாதவ், பாண்டியா ஆகியோரும் பினிஷிங் செய்வார்கள் என்பதால் அவருக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று சில முன்னாள் வீரர்கள் வைத்த கோரிக்கைக்கு செவி சாய்த்த ரோஹித் சர்மா ஆசிய கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் அவரை கழற்றி விட்டார்.