
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வந்த தினேஷ் கார்த்திக் நடப்பு சீசனுடன் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வை அறிவித்தார். முன்னதாக இந்தாண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே இதுதான் தன்னுடைய கடைசி ஐபிஎல் சீசனும் எனும் அறிவிப்பை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்றைய தினம் தனது 39ஆவது பிறந்தநாளை கொண்டாடும் தினேஷ் கார்த்திக், தனது பிறந்தநாள் பரிசாக அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், “கடந்த சில நாள்களாக எனக்குக் கிடைத்து வரும் அன்பும், ஆதரவும் உண்மையில் நெகிழ்ச்சியடைய வைத்தது. என்னை இப்படி உணர வைத்ததற்காக ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் சார்ந்திருக்கும் அனைத்து விதமான கிரிக்கெட் விளையாட்டிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். என் நீண்ட பயணத்தில் உடனிருந்த பயற்சியாளர்கள், கேப்டன்கள், தேர்வுக்குழுவினர், சக வீரர்கள், குடும்பத்தினர் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவிக்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.