தாம் பார்த்து வளர்ந்த சிறந்த வீரர் நீங்கள்; உங்களுடைய பாராட்டு பொன்னானது - தினேஷ் கார்த்திக்!
தாம் பார்த்து வளர்ந்த மிகச் சிறந்த வீரர்களில் ஒருவரான ரிக்கி பாண்டிங் தம்மை பாராட்டியுள்ளதை பார்த்து நெகிழ்ந்து போன தினேஷ் கார்த்திக் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நேற்று முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ளது. இந்திய அணி தனது முதல் போட்டியாக இன்று பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி மெல்பேர்னில் நடைபெறவுள்ளது.
கடைசியாக கடந்த 2007ஆம் ஆண்டு தோனி தலைமையில் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி, அதன்பின்னர் 15 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல காத்துக்கொண்டுள்ளது. அந்தவகையில் ரோகித் சர்மா தலைமையில் இந்தாண்டு பேட்டிங்கில் அசுர பலத்தில் இந்திய அணி களமிறங்குகிறது. இந்த முறை இந்திய அணியில் மிக முக்கியமான இணைப்பாக சேர்ந்திருப்பவர் தினேஷ் கார்த்திக் தான்.
Trending
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியும் கழட்டிவிட்ட பின்னர், வர்ணனையாளர் பணியை ஏற்ற அவர், திடீரென டாப் கியரில் பயணித்து வருகிறார். இந்த டி20 உலகக்கோப்பையில் இடம்பிடிப்பேன் என உறுதி எடுத்துக்கொண்டது போலவே ஐபிஎல் தொடரில் கெத்து காட்டி இந்திய அணிக்குள் வந்தார். அதுவும் இந்தியாவின் எதிர்காலம் என பார்க்கப்பட்ட ரிஷப் பந்த்-க்கு மாற்றாக ப்ளேயிங் 11இல் சேர்க்கப்படுகிறார்.
இந்நிலையில் இதனை பார்த்து ரிக்கிப் பாண்டிங் ஆச்சரியப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “கொல்கத்தா அணியால் கூட தக்கவைக்கப்படாத தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் வாழ்க்கை அத்துடன் முடிந்தது என நினைத்தேன். ஆனால் தற்போது உலகின் பெஸ்ட் ஃபினிஷராக உருவெடுத்துள்ளார். இதனை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் அவரின் கிரிக்கெட் நேரங்கள் முடிந்துவிட்டன.
இந்த வயதில் தினேஷ் கார்த்திக் இப்படி மாற்றத்தை தனக்குள் கொண்டு வந்தது சாதாரணமான காரியம் அல்ல. இந்திய வீரர்கள் அனைவரிடமும் நான் பார்த்து வியக்கும் விஷயம் அந்த விடா முயற்சி தான். என்ன ஆனாலும் கடைசி வரை பிடிவாதமாக இருக்கின்றனர். அவர் இல்லாமல் இந்தியா விளையாடாது என்ற சூழலை தினேஷ் உருவாக்கியது பிரமிப்பாக உள்ளது” என கூறியுள்ளார்.
இந்நிலையில் தாம் பார்த்து வளர்ந்த மிகச் சிறந்த வீரர்களில் ஒருவரான ரிக்கி பாண்டிங் தம்மை பாராட்டியுள்ளதை பார்த்து நெகிழ்ந்து போன தினேஷ் கார்த்திக் அவருக்கு கலங்கிய கண்களுடன் நன்றி தெரிவித்துள்ளார்.
இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், “ரிக்கி பாண்டிங். நான் வளரும் போது எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் என்று எளிமையாக சொல்வேன். மும்பை இந்தியன்ஸ் அணியில் அவருடன் நான் ஒவ்வொரு நிமிடங்களையும் மகிழ்ச்சியுடன் செலவிட்டேன். அவர் சாம்பியன் தலைவர், போட்டியை உன்னிப்பாக படிப்பவர், களத்தில் கடுமையான போட்டியை அளிக்கக்கூடியவர் என்பது அவரிடம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
இந்த வார்த்தைகளுக்காக மிகவும் நன்றிகள் ரிக்கி பாண்டிங். இந்த பாராட்டுக்கள் எனக்கு பொன்னானது. வருங்காலத்தில் மேலும் சில நேரங்களை உங்களுடன் செலவிடுவேன் என்று நம்புகிறேன். என்னுடைய இந்த பயணத்தில் என்னால் இதை சாதிக்க முடியும் என்று நம்பியதற்கு அபிஷேக் நாயர் முக்கிய காரணமாவார். மேலும் என் மீது நம்பிக்கை வைத்து இருட்டான பள்ளத்தில் இருந்த போது வெளிச்சத்தை போல் ஆதரவு கொடுத்த ரோகித் சர்மாவும் முக்கியமானவர். அத்துடன் என்னுடைய பயணத்தில் உடனிருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், கனவுகள் நிஜமாகும்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now