ஓய்வை அறிவிக்கிறாரா தினேஷ் கார்த்திக்? வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி!
நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கு பின் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு முடிவை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரி 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்திய ரசிகர்களால் கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் இத்தொடரில் உலகின் அனைத்து நட்சத்திர வீரர்கள் ஒன்றுசேர்ந்து விளையாடவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இத்தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல்ச் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது.
அதிலும் இப்போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடனும், ஆவலுடனும் காத்திருக்கின்றனர். அதேசமயம் ஐபிஎல் தொடரின் மற்ற அணிகளும் தங்களது லீக் சுற்றுக்கு தயாராகும் வகையில் பயிற்சியை தொடக்க ஆரம்பித்து விட்டனர். இதனால் ஐபிஎல் குறித்த செய்திகளும் அதிகரித்து வருகிறது.
Trending
இந்நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடருடன் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக்கிற்கு தற்போது 38 வயதாகுகிறது. இந்திய அணிக்காக கடந்த 2004ஆம் ஆண்டு அறிமுகமான தினேஷ் கார்த்திக் கடைசியாக 2022ஆம் ஆண்டும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடினார்.
இதுவரை இந்திய அணிக்காக 26 டெஸ்ட், 94 ஒருநாள் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 3ஆயிரத்திற்கு மேற்பட்ட ரன்களை அடித்துள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்காக நீண்ட காலமாக விளையாடி வந்தாலும், தோனி, விருத்திமான் சஹா, ரிஷப் பந்த் போன்ற வீரர்களின் காரணமாக அவரால் அணியில் தொடர்ச்சியாக இடம்பிடிக்க முடியவில்லை.
அதேபோல் ஐபிஎல் தொடரில் இதுவரை 242 போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 4516 ரன்களை குவித்துள்ளார். அதன்படி 2008ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் (டெல்லி கேப்பிட்டல்ஸ்) அணிக்காக முதன் முதலில் ஐபிஎல் தொடரில் விளையாடிய நிலையில், அதன்பின் கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லையன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளிட்ட அணிகள் விளையாடியுள்ளார்.
அதிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாகவும் இரண்டு சீசன்கள் செயல்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் இவர் ஒட்டுமொத்த சீசன்களிலும் சேர்த்து 2 போட்டிகளை மட்டுமே தவறவிட்டுள்ளார். அதன்பின் கடந்த 2022ஆ, ஆண்டு ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தினேஷ் கார்த்திக்கை ரூ.5.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடருடன் கிரிக்கெட்டிலிருந்து தினேஷ் கார்த்திக் விடைபெறவுள்ளார் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் அவர் கடந்த 2022ஆம் ஆண்டு பிறகு சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருப்பதுடன், தொலைக்காட்சியிலும் முழுநேர வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். மேலும் அவர் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருவதால், தற்போது ஓய்வு முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now