
நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் ஃபாஃப் டூ பிளஸிஸ் தலைமையிலான ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தில் முடித்தது. பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் இருந்தும் சொந்த மண்ணில் குஜராத் அணிக்கு எதிரான தோல்வி, அந்த அணிக்கு பின் விளைவுகளை ஏற்படுத்தியது. இதனால் ஆர்சிபி ரசிகர்கள் விரக்தியடைந்தனர்.
ஒரு ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு 16 ஆண்டுகளாக காத்திருப்பதா என்றும் சமூக வலைதளங்களில் புலம்பி தள்ளினர். 2016ஆம் ஆண்டுக்கு பின் உச்சக்கட்ட ஃபார்மில் இருந்த விராட் கோலி 630 ரன்கள் குவித்தும், ஆர்சிபி அணியை காப்பாற்ற முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் 2019ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக மூன்று முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஆர்சிபி அணி, நடப்பாண்டில் அதை கூட செய்ய முடியவில்லை.
இதனால் ஆர்சிபி அணி நிர்வாகம் மாற்றமடைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்பட்டது. இதனிடையே ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் சாஹல், என்னை ஆர்சிபி அணி நிர்வாகம் எதற்காக ஏலத்தில் வாங்கவில்லை என்பதே தெரியவில்லை. எத்தனை கோடி ஆனாலும் நிச்சயம் வாங்குவோம் என்று உறுதியளித்தனர். ஆனால் ஏலத்திற்கு பின் ஒருவர் கூட என்னிடம் பேசவில்லை என்று கூறினார்.