
மகளிர் அண்டர்19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மலேசியாவில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய மகளி யு19 மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் யு19 அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கோலா லம்பூரில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க யு19 மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய யு19 மகளிர் அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக இல்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சிமோன் லோரன்ஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனை ஜெம்மா போத்தா 16 ரன்களுடன் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய டயாரா ராம்லகன் 3 ரன்களுக்கும், கேப்டன் கைலா ரெய்னெக் 7 ரன்களுடனும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய கரபோ மெசோ 10 ரன்களையும், ஃபே கோவ்லிங் 15 ரன்களுக்கும், மீகே வான் வூர்ஸ்ட் 3 பவுண்டரிகளுடன் 23 ரன்களையும் சேர்த்து விக்கெட்டுகளை இழக்க, அடுத்து வந்த வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க யு19 அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.