
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் சமீபத்தில் நிறைவடைந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி 2 - 1 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்தது. இந்த தொடரில் இந்திய அணியின் தோல்விகளுக்கு மோசமான பேட்டிங் தான் காரணம் என விமர்சனங்கள் எழுந்து வரும் சூழலில் அதில் முக்கியமானவராக சூர்யகுமார் யாதவ் தான் இருந்து வருகிறார்.
டி20 கிரிக்கெட்டில் நம்பர். 1 பேட்டராக இருக்கும் சூர்யகுமார் யாதவ் ஒருநாள் கிரிக்கெட்டில் படு மோசமாக சொதப்பி வருகிறார். ஸ்ரேயாஸ் ஐயருக்கு மாற்றாக ஆஸ்திரேலிய தொடருக்கு வந்த அவர் தொடர்ச்சியாக 3 போட்டிகளிலும் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றினார். இதனால் தோல்விக்கே அவர் தான் காரணம் என விமர்சனங்கள் குவிந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்கச் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் எனவும் ஒப்பிட்டு பேசி வருகிறது.
முன்னணி வீரராக இருந்து வரக்கூடிய சூர்யகுமார் யாதவ் இதுவரை 21 இன்னிங்ஸ்களில் விளையாடி சராசரியாக 24 ரன்களை மட்டுமே வைத்துள்ளார். இதில் 2 அரைசதங்களை மட்டுமே அடித்திருக்கிறார். ஆனால் சஞ்சு சாம்சன் வெறும் 11 இன்னிங்ஸ்களில் விளையாடி சராசரியாக 66 ரன்களை வைத்துள்ளார். இதுமட்டுமல்லாமல் எந்த இடத்தில் வேண்டுமானாலும் சஞ்சு சாம்சன் களமிறங்கக்கூடியவர்.