ஐபிஎல் தொடரில் விளையாடாதீர்கள் - கபில் தேவ் சாடல்!
ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது அழுத்தமாக இருந்தால் அதில் விளையாடாதீர்கள் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் அறிவுறுத்தியுள்ளார்.
டி20 உலக கோப்பை நெருங்கும் நிலையில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலக கோப்பையில் அரையிறுதிக்கு கூட முன்னேறாமல் வெளியேறி ஏமாற்றமளித்த இந்திய அணி, இம்முறை ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பையை வென்றே தீரும் தீவிரத்தில் உள்ளது.
இந்நிலையில், பும்ரா, ஜடேஜா ஆகிய முன்னணி வீரர்கள் காயம் காரணமாக டி20 உலக கோப்பையில் ஆடவில்லை. பும்ராவுக்கு மாற்று வீரராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ள வீரர்களில் ஒருவராக இருந்த தீபக் சாஹரும் காயமடைந்தார்.
Trending
இப்படியாக முக்கியமான மற்றும் உலக கோப்பை மாதிரியான பெரிய தொடர்களில் ஆடமுடியாமல் சீனியர் மற்றும் முக்கியமான வீரர்கள் விலகுவது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைகிறது.
3 விதமான ஃபார்மட்டிலும் தொடர்ச்சியாக விளையாடும் வீரர்களுக்கு, குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்களுக்கு போதுமான ஓய்வளிக்கப்படுகிறது. அதை மீறியும் அவர்கள் காயமடைந்து, முக்கியமான தொடர்களில் இந்தியாவிற்காக ஆடமுடியாமல் போகிறது. அதற்கு, அவர்கள் ஐபிஎல்லுக்கு முக்கியத்துவம் கொடுத்து 2 மாத காலம் முழுவதுமாக ஆடுவதுதான் காரணம் என்ற விமர்சனங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே இருந்துவருகிறது.
இந்திய அணிக்காக ஆடும்போது ஓய்வு எடுத்துக்கொள்ளும் வீரர்கள், ஐபிஎல்லில் மட்டும் ஓய்வே எடுக்காமல் இரண்டு-இரண்டரை மாதங்கள், காசுக்காக தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடுகின்றனர். ஐபிஎல்லுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆடுவதால் தான், சில வீரர்கள் அடிக்கடி காயமடைந்து முக்கியமான தொடர்களில் இந்தியாவிற்காக ஆடமுடியாமல் போகிறது.
டி20 உலக கோப்பையில் பும்ரா, ஜடேஜா ஆகிய 2 மிகப்பெரிய வீரர்கள் காயத்தால் ஆடாத நிலையில், இப்போதும் ஐபிஎல் குறித்த விவாதம் எழுந்துள்ளது. அதில் உண்மையும் இருக்கிறது.
இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள கபில் தேவ், “ஐபிஎல்லில் விளைடாடுவது வீரர்களுக்கு அதிக அழுத்தத்தை அளிக்கிறது என்று டிவியில் அடிக்கடி கேட்க நேரிடுகிறது. அப்படி அது அழுத்தமாக இருக்கிறது என்றால், அதில் விளையாடாதீர்கள் என்பதுதான் எனது அறிவுரை. ஒரு கிரிக்கெட் வீரருக்கு வேட்கையும் அதீத ஆர்வமும் இருந்தால், கண்டிப்பாக அது அழுத்தமாக இருக்காது.
மன அழுத்தம் என்ற வார்த்தையை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. நான் ஒரு முன்னாள் கிரிக்கெட்டர். விளையாடுவதே சந்தோஷத்திற்காகத்தான். அப்படியிருக்கையில், மகிழ்ந்து ஆடும்போது அதில் அழுத்தத்திற்கு எங்கே இருக்கிறது இடம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now