
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு ஜோ ரூட் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக கொண்டுவரப்பட்டு, புதிய தலைமை பயிற்சியாளராக டெஸ்ட் அணிக்கு பிரண்டன் மெக்கலம் கொண்டுவரப்பட்ட பிறகு, டெஸ்ட் கிரிக்கெட்டை ஒருநாள் கிரிக்கெட் போல இங்கிலாந்து விளையாடி வருகிறது.
இங்கிலாந்தின் இந்த அதிரடி டெஸ்ட் கிரிக்கெட் அணுகுமுறைக்கு, இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் மெக்கலமை பட்டப் பெயரில் அழைக்கும் பாஸ் என்பதோடு சேர்த்து பாஸ்பால் என்று அழைக்கப்படுகிறது. தற்பொழுது இங்கிலாந்தின் அணுகுமுறை உலக டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஒரு குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தி வருவதை மறுக்க முடியாது. பாகிஸ்தான் அணி கூட தற்பொழுது இலங்கைக்கு எதிராக வழக்கத்தை விட வேகமாக ரன் குவித்து வருகிறது.
இந்திய அணியை எடுத்துக் கொண்டால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் முதல் இன்னிங்சை மிகவும் பொறுப்பான முறையில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு உரிய நிதானத்தில் விளையாடி, மழையின் குறுக்கீடு அதிகமாக இருந்த காரணத்தினால், இரண்டாவது இன்னிங்ஸை டி20 போல் விளையாடி டிக்ளர் செய்திருந்தது. இதில் 12.2 ஓவர்களில் 100 ரண்களைக் கடந்து உலக சாதனையும் படைத்திருந்தது.