ஐபிஎல் 2023: சிராஜ் வேகத்தில் வீழ்ந்தது பஞ்சாப் கிங்ஸ்!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று மாலை நடைபெற்ற 27ஆவது லீக் ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியுடன், ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடியது. இந்நிலையில் இன்றைய போட்டிகான இரு அணியிலும் கேப்டன்கள் மாற்றப்பட்டு, பஞ்சாப் கிங்ஸை சாம் கரனும், ஆர்சிபியை விராட் கோலியுடன் வழிநடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் விராட் கோலி மற்றும் இம்பேக்ட் பிளேயராக ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை களமிறங்கினர். தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் விக்கெட்டை இழக்காமல் அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Trending
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடக்க, இவரும் முதல் விக்கெட்டிக்கு 137 ரன்களை பார்ட்னர்ஷிப் முறையிலும் அமைத்தனர். அதன்பின் 59 ரன்களில் விராட் கோலி எதிர்பாராத விதமாக விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த கிளென் மேக்ஸ்வெல் முதல் பந்தையே அடிக்க முயற்சித்து ஹர்ப்ரீத் பிரார் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ஃபாஃப் டூ பிளெசிஸ் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 84 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் பெரிதளவில் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை மட்டுமே எடுத்தது. பஞ்சாப் தரப்பில் ஹர்ப்ரீத் பிரார் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு அதர்வா டைட் - பிரப்சிம்ரன் சிங் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் அதர்வா டைட் 4 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய மேத்யூ ஷார்ட் 8, லியாம் லிவிங்ஸ்டோன் 2, ஹர்ப்ரீத் பாட்டியா 13, சாம் கரண் 10 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இருப்பினும் பிரப்சிம்ரன் சிங் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் 46 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஷாருக் கான் 7 ரன்களிலும், ஹர்ப்ரீத் பிரார் 13 ரன்களிலும், நாதன் எல்லிஸ் ஒரு ரன்னிலும் என ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். ஆனால் மறுமுனையில் இறுதிவரை போராடிய ஜித்தேஷ் சர்மா 27 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 41 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆர்சிபி அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும், வநிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் ஆர்சிபி அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now