
தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் பிரபலமானது புஜ்ஜி பாபு கோப்பை கிரிக்கெட் தொடர். இத்தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கு டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன், டிஎன்சிஏ லெவன், ஹைதராபாத், மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட அணிகள் முன்னேறி அசத்தியுள்ளன. இதில் திருநெல்வேலியில் நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் மற்றும் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இதனையடுத்து திண்டுக்கல்லில் நடைபெறும் இத்தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் டிஎன்சிஏ லெவன் மற்றும் சத்தீஸ்கர் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதிலிருந்து எந்த இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான சூர்யகுமார் யாதவ் மும்பை அணிக்காக விளையாடினார்.
அந்தவகையில் டிஎன்சிஏ லெவன் அணிக்கு எதிரான போட்டியின் போது மும்பை அணியின் நட்சத்திர வீரரான சூர்யகுமார் யாதவ் அவரது கையில் காயமடைந்ததாக தகவல் வெளியானது. எனினும், அவரது காயம் எவ்வளவு தீவிரமானது என்பது குறித்து தற்போது வரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் இந்த காயம் காரணமாக எதிர்வரும் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூர்யகுமார் யாதவ் விளையாடுவாரா என்ற சந்தேகத்தையும் கிளப்பியது.