
இந்தியா ஏ - இந்தியா டி அணிகளுக்கு இடையேயான இரண்டாம் சுற்று துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், ஷம்ஸ் முலானி, தனூஷ் கோட்டியான் ஆகியோரது அரைசதத்தின் மூலம் முதல் இன்னிக்ஸில் 290 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஷம்ஸ் முலானி 89 ரன்களையும் தனூஷ் கோட்டியான் 53 ரன்களையும் சேர்த்தனர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத்ஹ் தொடங்கிய இந்தியா டி அணியில் அதர்வா டைடே 4 ரன்களிலும், யாஷ் தூபே 14 ரன்களிலும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ரன்கள் ஏதுமின்றியும், சஞ்சு சாம்சன் 5 ரன்களிலும், ரிக்கி பூஸ் 23 ரன்களையும் சேர்த்த நிலையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
அதன்பின் களமிறங்கிய தேவ்தத் படிக்கல் அபாரமாக விளையாடியதுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். மேலும் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தேவ்தத் படிக்கல் 15 பவுண்டரிகளுடன் 92 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனால் அந்த அணி 183 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இந்தியா ஏ அணி தரப்பில் கலீல் அஹ்மத், ஆகிப் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.