 
                                                    துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று வரும் மூன்றாவது லீக் போட்டியில் இந்தியா ஏ மற்றும் இந்தியா டி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா டி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், ஷம்ஸ் முலானி, தனூஷ் கோட்டியான் ஆகியோரது அரைசதத்தின் மூலம் முதல் இன்னிக்ஸில் 290 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷம்ஸ் முலானி 89 ரன்களையும் தனூஷ் கோட்டியான் 53 ரன்களையும் சேர்த்தனர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா டி அணியில் நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய தேவ்தத் படிக்கல் சிறப்பாக விளையாடியதுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படிக்கல் 92 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழது பெவிலியன் திரும்பினர். இதனால் இந்தியா டி அணி முதல் இன்னிங்ஸில் 183 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
இதனையடுத்து 107 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய ஏ அணிக்கு கேப்டன் மயங்க் அகர்வால் - பிரதாம் சிங் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். இதில் 56 ரன்கள் எடுத்த நிலையில் மயங்க் அகர்வால் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய திலக் வர்மாவும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். இதில் மற்றொரு தொடக்க வீரரான பிரதாம் சிங் தனது சதத்தைப் பதிவுசெய்த கையோடு 122 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
 
                         
                         
                                                 
                         
                         
                         
                        