
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசனானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் லீக் போட்டியில் இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்தியா பி அணியானது தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினாலும், மறுபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷீர் கான் சதமடித்து அசத்தியதுடன், அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார்.
இதன் காரணமாக இந்தியா பி அணியானது 321 ரன்களை குவித்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக முஷீர் கான் 16 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 181 ரன்களையும், நவ்தீப் சைனி 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 56 ரன்களையும் சேர்த்தனர். இந்திய ஏ அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா ஏ அணிக்கு மயங்க் அகர்வால் - கேப்டன் ஷுப்மன் கில் இணை பொறுப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் ஷுப்மன் கில் 25 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மயங்க் அகர்வாலும் 36 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்தள்ள ரியான் பராக் 30 ரன்களையும், கேஎல் ராகுல் 37 ரன்களிலும், தனூஷ் கோட்யான் 32 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதன் காரணமாக இந்திய ஏ அணி 231 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா பி தரப்பில் முகேஷ் குமார், நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.