
இந்தியாவின் பாரம்பரியமிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்று துலீப் கோப்பை தொடர். அந்தவகையில் நடப்பாண்டு துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்சமயம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேற்கொண்டு இத்தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கே எதிர்வரும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வய்ப்பு கிடைக்கும் என்பதால், இத்தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புகளை வைத்துள்ளன.
அந்தவகையில் நேற்று தொடங்கிய இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா சி மற்றும் இந்தியா டி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா சி அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்தியா டி அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்ஸர் படேல் அரைசதம் கடந்ததுடன் 86 ரன்களைச் சேர்த்திருந்தார்..
இதன்மூலம் இந்தியா டி அணியானது முதல் இன்னிங்ஸில் 164 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா சி அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்களிலும், சாய் சுதர்ஷன் 7 ரன்களிலும், ஆர்யன் ஜூரெல், ராஜத் பட்டிதார் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.