
ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. 16வது சீசன் அடுத்த ஆண்டு நடக்கிறது. அடுத்த சீசனுக்கான ஏலம் வரும் 23ஆம் தேதி கொச்சியில் நடக்கிறது. அந்த ஏலத்திற்கு 991 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
இந்த ஏலத்திற்கு முன்பாக அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை விடுவித்தன. அந்தவகையில் சிஎஸ்கே அணியின் மேட்ச் வின்னரும், அந்த அணியின் செல்லப்பிள்ளைகளில் ஒருவருமாக திகழ்ந்த டுவைன் பிராவோவை விடுவித்தது. கடந்த சீசனுக்கான ஏலத்தில் ரூ.4.4 கோடி கொடுத்து பிராவோவை வாங்கிய சிஎஸ்கே அணி, அதைவிட குறைவான தொகைக்கு அவரை ஏலத்தில் எடுப்பதற்காக விடுவித்ததாக கருதப்பட்டது.
ஆனால் ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், அதில் பிராவோ பெயர் இல்லை. இந்நிலையில், டுவைன் பிராவோ ஐபிஎல்லில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இதையடுத்து அவர் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.