மும்பை அணிக்கு எதிராக மும்பையில் விளையாடுவது தான் கடினம் - டுவைன் பிராவோ!
ஐபிஎஸ் சீசனில் இருப்பதிலேயே கடினம் மும்பை அணிக்கு எதிராக மும்பையில் விளையாடுவது தான். இருப்பினும் இம்முறை எங்களிடம் சிறந்த திட்டம் இருக்கிறது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் கோச் டிவைன் பிராவோ பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 12ஆவது லீக் போட்டியில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி மும்பையில் நடைபெறுவதால் மும்பை இந்தியன்ஸ் அணி கூடுதல் பலத்துடன் இருப்பதாக தெரிகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை இரண்டு லீக் போட்டிகளில் விளையாடி தலா ஒரு வெற்றி ஒரு தோல்வியை பெற்றிருக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு லீக் போட்டியில் மட்டுமே விளையாடியது. ஆர்சிபி அணிக்கு எதிரான அந்த போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியையும் சந்தித்தது. இந்த சீசனில் முதல் முறையாக மும்பையில் விளையாடுவதால், முதல் வெற்றியை பதிவு செய்வதற்கு முழு முனைப்புடன் இருக்கிறது.
Trending
மும்பை மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கிடையேயான போட்டி என்றாலே பரபரப்பிற்கு சற்றும் பஞ்சம் இருக்காது. போட்டியின் கடைசி ஓவர் வரை எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கும். இரு அணிகளும் முதல் முறையாக பிராவோ மற்றும் பொல்லார்ட் இல்லாமல் எதிர்கொள்கின்றன. பிராவோ சிஎஸ்கே அணியின் பவுலிங் கோச்சாக இருக்கிறார். பொல்லார்ட் மும்பை அணியின் பேட்டிங் கோச்சாக பொறுப்பில் இருக்கின்றார்.
இந்நிலையில் மும்பை அணிக்கு எதிரான போட்டி குறித்து பேட்டியளித்த டுவைன் பிராவோ கூறுகையில், “ஐபிஎல்-இல் இருப்பதிலேயே கடினமான போட்டி என்றால் மும்பைக்கு வந்து மும்பைக்கு எதிராக விளையாடுவது தான். இந்த மைதானத்தில் மிகவும் நிதானமான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும். கடைசிவரை எடுத்துச்செல்ல வேண்டும் என்பது தான் எங்களது திட்டம்.
மும்பை இந்தியன்ஸ் மிகச்சிறந்த அணி. அவர்களுக்கு எதிராக திட்டம் இல்லாமல் களமிறங்க முடியாது. சென்னை அணியின் ‘எல்லோ ஆர்மி’ இந்தியாவின் எல்லா மைதானங்களிலும் இருக்கின்றது. இங்கும் எங்களுக்கு நிறைய சப்போர்ட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அதுதான் எங்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும்” என்று தெரிவித்தார்.
மும்பை மற்றும் சிஎஸ்கே போட்டி குறித்து பேசிய கீரன் பொல்லார்ட் கூறுகையில், “தோனிக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். எங்கு சென்றாலும் அது அவருக்கு ஹோம் கிரவுண்ட் போன்று சப்போர்ட் கிடைக்கிறது. மும்பையிலும் அதுபோன்ற ஒரு சப்போர்ட் அவருக்கு கண்டிப்பாக இருக்கும். பினிஷிங் ரோலில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தோனிக்கு என்று தனித்திட்டம் இல்லாமல் நாங்கள் உள்ளே வர முடியாது. நிச்சயம் இருக்கிறது. இந்த சீசனின் முதல் வெற்றியை பெறுவதற்கு காத்திருக்கிறோம்” என்றார்.
Win Big, Make Your Cricket Tales Now