
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ. இவர், கடந்த 2004ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு அறிமுகமான நிலையில், இதுநாள் வரை 40 டெஸ்ட், 164 ஒருநாள் மற்றும் 91 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 5 சதங்கள், 27 அரைசதங்கள் என 7ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களையும் விளாசியுள்ளார். மேற்கொண்டு தனது பந்துவிச்சில் 360 சர்வதேச விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
அதுமட்டுமில்லாம் வெஸ்ட் இண்டீஸ் அணி ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள நிலையில், இரு முறையும் அந்த அணி கோப்பையை வெல்வதற்கு தனது பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் டுவைன் பிராவோ பங்களித்துள்ளார். மேற்கொண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 161 போட்டிகளில் விளையாடி 1560 ரன்களையும், 183 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக கடந்த 2021ஆம் ஆண்டு கடைசியாக விளையாடிய டுவைன் பிராவோ தனது சர்வதேச ஓய்வை அறிவித்திருந்த நிலையில், டி20 லீக் தொடர்களில் தொடர்ந்து விளையாடி வந்தார். மேலும் ஐபிஎல் தொடரிலும் கடந்த 2022ஆம் ஆண்டுடன் ஓய்வு பெற்ற அவர், அதன்பின் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராகவும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.