
இளம் வீரர்களுக்கான எமர்ஜிங் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்றுவருகின்றன. இதில் இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் ஏ - இலங்கை ஏ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் சைம் அயூப் 22 ரன்களுக்கும், ஃபர்ஹான் 12 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த தஹிப் தஹிர் 26, கசிம் அக்ரம் 8 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த ஒமைர் யூசுப் - முகமது ஹாரிஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தனர். பின் 88 ரன்களுக்கு ஒமைர் யூசுப்பும், 52 ரன்களுக்கு முகமது ஹாரிஸும் விக்கெட்டை இழந்தனர். இறுதியில் முபசிர் கான் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 322 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.