எமர்ஜிங் ஆசிய கோப்பை 2023: அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய ஏ அணி!
வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை தொடரில் நேபாள் ஏ அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய ஏ அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா ஏ அணியை எதிர்த்து நேபாள் ஏ அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற நேபாள் ஏ அணி கேப்டன் ரோகித் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நேபாள் ஏ அணி 35 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இன்னொரு முனையில் நிதானமாக விளையாடிய கேப்டன் ரோஹித் 65 ரன்களில் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் நிஷாந்த் சிந்து பந்துவீச்சில் டெய்லண்டர்களும் ஆட்டமிழந்தனர். இறுதியாக நேபாள் அணி 39.2 ஓவர்களில் 167 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய ஏ அணி தரப்பில் நிஷாந்த் சிந்து 4 விக்கெட்டுகளையும், ஹங்கர்கேகர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Trending
இதையடுத்து எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு சாய் சுதர்சன் - அபிஷேக் சர்மா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடினர். சிறப்பாக விளையாடி அபிஷேக் சர்மா 43 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதையடுத்து ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரி, சிக்சர் என்று பறந்துகொண்டே இருந்தது.
இதனால் அபிஷேக் சர்மா சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 69 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து அபிஷேக் சர்மா ஆட்டமிழக்க, தொடர்ந்து துருவ் ஜுரெல் களமிறங்கினார். அதன்பின்னர் அதிரடியாக விளையாடிய சாய் சுதர்சன்47 பந்துகளில் அரைசதம் விளாசினார். இறுதியாக வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜுரெல் சிக்சர் அடித்து வெற்றிபெற வைத்தார்.
இதன் மூலம் இந்திய ஏ அணி 22.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் நேபாள் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இதன்மூலம் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பைத் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக அபிஷேக் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.
Win Big, Make Your Cricket Tales Now