ENG vs IND : இங்கிலாந்தை துவம்சம் செய்தது இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று, ஐந்து போட்டிகள் கொனட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 290 ரன்களி குவித்தது. இதன் மூலம் 99 ரன்கள் முன்னிலையும் பெற்றது.
இதையடுத்து 99 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா சதமடித்தும், புஜாரா, ரிஷப் பந்த், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் அரைசதம் அடித்தும் அசத்தினார்.
இதன் மூலம் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 466 ரன்களை பெற்றதுடன், இங்கிலாந்து அணிக்கு இலக்காக 368 ரன்களையும் நிர்ணயித்தது.
பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ரோரி பர்ன்ஸ் - ஹாசீப் ஹமீத் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தது. அதனால் ஐந்தாம் நாளான இன்று இங்கிலாந்து அணி வெற்றியை ஈட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பர்ன்ஸ் 50 ரன்களிலும், ஹாசீப் ஹமீத் 61 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து வந்த இங்கிலாந்து அணி வீரர்கள் இந்திய அணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதில் உமேஷ் யாதவ் மூன்று விக்கெட்டுகளையும், பும்ரா, ஷர்துல் தாக்கூர், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன் மூலம் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியதுடன், ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது. இப்போட்டியில் சதமடித்து இந்திய அணி வெற்றிக்கு காரணமாக இருந்த ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Also Read: மதியம் பாகிஸ்தான் அணி அறிவிப்பு; மாலை பயிற்சியாளர்கள் ராஜினாமா - தொடரும் குழப்பத்தில் பிசிபி!
மேலும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரை நிர்ணயிக்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 10ஆம் தேதி மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now