
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்சமயம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றன.
இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது ஒருநாள் போட்டி நேற்று லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டி தொடங்கும் முன்னரே மழை நீடித்த காரணத்தினால் முதலில் 41 ஓவர்களாக குறைக்கப்பட்டு டாஸ் வீசப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுதாக அறிவித்தது. அதன்பின் போட்டி தொடங்க இருந்த நிலையில் மீண்டும் மழை பெய்த காரணத்தால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இப்போட்டியானது 39 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பில் சால்ட் 22 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வில் ஜேக்ஸ் 10 ரன்களுடன் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் பென் டக்கெட்டுடன் இணைந்த கேப்டன் ஹாரி ப்ரூக் சிரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இவரும் தொடர்ந்து அபாரமாக விளையாடியதுடன் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர்.