
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணியானது தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் நான்கு ஒருநாள் போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டிலும், இங்கிலாந்து அணி இரண்டு போட்டியிலும் வெற்றிபெற்று 2-2 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. அதன்படி தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. மேலும் இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷ், மிட்செல் ஸ்டார்க் ஆகியோ நீக்கப்பட்டு மேத்யூ ஷார்ட், கூப்பர் கன்னோலி ஆகியோரும், இங்கிலாந்து அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் நீக்கப்பட்டு, ஒல்லி ஸ்டோன் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் - பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் அதிரடியாக விளையாடிய நிலையில் முதல் விக்கெட்டிற்கு 58 ரன்கள் பார்ட்னஷிப்பும் அமைத்தனர். இதில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய பில் சால்ட் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 45 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வில் ஜேக்ஸும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் டக்கெட்டுடன் இணைந்த கேப்டன் ஹாரி புரூக்கும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.