
நாட்டிங்ஹாமில் ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்கிய இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தோ்வு செய்தது. ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி ஆகியோரின் வேகத்தில் அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், ஷமி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, முதல்நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது. ரோஹித் 9, கே.எல்.ராகுல் 9 ரன்களுடன் நேற்று 2ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கினா். இதில் ரோஹித் 6 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் சோ்த்த நிலையில், ஒல்லி ராபின்சன் வீசிய 38ஆவது ஓவரில் சாம் கரனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினாா். அடுத்து வந்த புஜாரா, விராட் கோலி, ரஹானே என மூத்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அட்டமிழந்தனர்.
அடுத்து ரிஷப் பந்த் களம் புகுந்தாா். பின்னா் மழை காரணமாக நீண்ட நேரம் ஆட்டம் தடைப்பட, 2ஆம் நாள் ஆட்டம் அப்படியே முடித்துக்கொள்ளப்பட்டது. அரைசதம் கடந்த ராகுல் 57, ரிஷப் பந்த் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்த நிலையில், மூன்றாவது நாள் ஆட்டத்தை இந்திய அணி இன்று தொடர்ந்து விளையாடியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ரிஷப் பந்த் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின்னர் வந்த ரவீந்திர ஜடேஜா ராகுலுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டனர்.