
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 40.4 ஓவர்களில் 78 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து 432 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா நிதானமாக ஆடியது. துவக்க வீரர் கே.எல்.ராகுல் 8 ரன்னில் அவுட்டான நிலையில், அடுத்து இறங்கிய புஜாரா, ரோகித்துடன் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினார். ரோகித்-புஜாரா ஜோடி 82 ரன்கள் சேர்த்தது. அரை சதம் கடந்த ரோகித் 59 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலியும், பொறுமையுடன் ஆடினார். அத்துடன், மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார். இதனால், மூன்றாம் நாள் ஆட்டநேர இறுதியில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 91 ரன்னுடனும், விராட் கோலி 45 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.