
Amanjot Kaur Equals Virat Kohli Record: இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய வீராங்கனை அமஞ்சோத் கவுர் அரைசதம் கடந்ததன் மூலம் விராட் கோலியின் சாதனையை சமன்செய்து அசத்தியுள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று பிரிஸ்டோலில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 63 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அமஞ்சோத் கவுர் 9 பவுண்டரிகளுடன் 63 ரன்களையும், ரிச்சா கோஷ் 32 ரன்களையும் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களைச் சேர்த்தது.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து மகளிர் அணி டாமி பியூமண்ட் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 54 ரன்களையும், சோஃபி எக்ஸ்லெஸ்டோன் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 35 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்தஅணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது.