
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளைப் பதிவுசெய்து தொடரை சமன்செய்தன. இதைத்தொடர்ந்து நடைபெற்றுவரும் ஒருநாள் தொடரின் முதல் 3 போட்டிகளில் இங்கிலாந்து அணி இரண்டு வெற்றிகளைப் பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று லண்டனிலுள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து, நியூசிலாந்தை பந்துவீச அழைத்தார்.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜானி பேர்ஸ்டோவ் - டேவிட் மாலன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜானி பேர்ஸ்டோவ் 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, அடுத்து களமிறங்கிய ஜோ ரூட் 29, ஹாரி ப்ரூக் 10 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.