ENG vs PAK: நூறு விழுக்காடு பார்வையாளர்களுடன் நடைபெறும் இங்கி.,-பாக்., போட்டி!
லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டிக்கு 100 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான 24 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி தனி விமானம் மூலம் இங்கிலாந்து சென்றடைந்துள்ளது.
அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் ஜூலை 8 முதல் 13ஆம் தேதி வரையும், டி20 தொடர் ஜூலை 16 முதல் 20ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளன.
Trending
இந்நிலையில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி லண்டனிலுள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. தற்போது இங்கிலாந்தில் கரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் இப்போட்டிக்கு 100 விழுக்காடு பார்வையாளர்களை அனுமதிக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,“இங்கிலாந்து - பாகிஸ்தான் போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து நாங்கள் இங்கிலாந்தின் பொது சுகாதார துறை மற்றும் எங்கள் உள்ளூர் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்துள்ளோம். இந்த ஆலோசனையின் முடிவில் இப்போட்டியை 100 விழுக்காடு பார்வையாளர்களுடன் நடத்த எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இச்செய்தியை உங்களுக்கு அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இப்போட்டியைக் காண வரும் பார்வையாளர்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி 11 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். பார்வையாளர்கள் கட்டாயம் தடுப்பூசி மற்றும் கரோனா பரிசோதனை செய்ததற்கான ஆவணங்களை காண்பிக்க வேண்டும், போட்டியின் போது அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக எட்ஜ்பஸ்டனில் நடைபெறும் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டிக்கு 80 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now