
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 2 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணியானது இரண்டிலும் வெற்றியைப் பதிவுசெய்து தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது கேப்டன் ஒல்லி போப்பின் அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 325 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஒல்லி போப் 154 ரன்களைக் குவித்தார். இலங்கை அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மிலன் ரத்நாயக்கே 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர் திமுத் கருணரத்னே 9 ரன்களுக்கும், குசால் மெண்டிஸ் 14 ரன்களுக்கும், ஏஞ்சலோ மேத்யூஸ் 3 ரன்களுக்கும், தினேஷ் சண்டிமால் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் மற்றொரு தொடக்க வீரரான பதும் நிஷங்காவும் அரைசதத்தை பதிவுசெய்திருந்த நிலையில் 64 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்துள்ள கேப்டன் தனஞ்செயா டி சில்வா - கமிந்து மெண்டிஸ் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.