
வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஜூலை 18 ஆம் தேதி நாட்டிங்ஹாமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது ஒல்லி போப், பென் டக்கெட், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தாலும் 416 ரன்களைக் குவித்து வலிமையான தொடக்கத்தை பெற்றுள்ளது. இதில் அதிகபட்சமாக ஒல்லி போப் 121 ரன்களையும், பென் டக்கெட் 71 ரன்களையும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 69 ரன்களையும் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அல்ஸாரி ஜோசப் 3 விக்கெட்டுகளையும், ஜெய்டன் சீல்ஸ், கெவின் சிக்ளெர், கெவம் ஹாட்ஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இதனையடுத்து இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் அலிக் அதானாஸ் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 82 ரன்களையும், கேவம் ஹாட்ஜ் தனது சத்தைப் பதிவுசெய்ததுடன் 19 பவுண்டரிகளுடன் 120 ரகளையும் சேர்க்க இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டர் 23 ரன்களுடனும், ஜோஷுவா ட சில்வா 32 ரன்களுடனும் தொடந்தனர்.