
வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது.
இதையடுத்து இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை சௌதாம்படனில் உள்ள ரோஸ் பௌல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இங்கிலாந்து அணி டி20 தொடரை வென்றுள்ள நிலையில், இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்றுமா அல்லது வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறுதல் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் இந்திய அணியின் ஜாம்பவான் ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதன்படி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களைக் குவித்த வீரராக ரோஹித் சர்மா உள்ளார். அவர் இதுவரை வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 22 இன்னிங்ஸ்களில் 693 ரன்களைக் குவித்துள்ளார்.