ENG W vs IND W, only Test: வலிமையான நிலையில் இங்கிலாந்து; பந்துவீச்சில் அசத்தும் இந்தியா!
இந்திய மகளிருக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து - இந்திய மகளிர் அணிகளுக்கிடையேயான ஒரேயொரு டெஸ்ட் ஆட்டம் பிரிஸ்டாலில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி கேப்டன் ஹீத்தர் நைட் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
அதன்படி அந்த அணியின் தொடக்க வீராங்கனைகளாக லாரென் வின்பீல்ட் ஹில் - டாமி பியூமாண்ட் களமிறங்கினர். இந்த இணை இங்கிலாந்துக்கு நல்ல தொடக்கத்தைத் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்த நிலையில் வின்பீல்ட் ஹில் 35 ரன்களுக்கு பூஜா வஸ்தராகர் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, கேப்டன் நைட் பியூமாண்ட்டுடன் இணைந்தார்.
Trending
பியூமாண்ட் அரைசதத்தைக் கடக்க இந்த இணையும் சிறப்பான பாட்னர்ஷிப்பை அமைத்தது. இதனால் 2ஆவது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்த நிலையில் பியூமாண்ட் 66 ரன்களுக்கு ஸ்நே ராணா பந்தில் ஆட்டமிழந்தார்.
கேப்டன் நைட் தொடர்ந்து நிதானத்தை வெளிப்படுத்த நாடாலி சிவர் அவருடன் இணைந்து பாட்னர்ஷிப் அமைக்கத் தொடங்கினார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹீத்தர் நைட் அரைசதம் கடந்தார்.
பிறகு சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹீத்தர் நைட் 95 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். அவரைத் தொடர்ந்து நடாலி ஸ்கைவரும் 42 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்தவர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதனால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து மகளிர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்களை சேர்த்துள்ளது. இந்திய அணி தரப்பில் ஸ்நே ராணா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இங்கிலாந்து அணி தரப்பில் சோபியா டாங்க்லி 12 ரன்களுடனும், கேத்ரின் பிரண்ட் 7 ரன்களுடனும் நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now