
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் முன்னதாக இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனால் இங்கிலாந்து அணியுடான டெஸ்ட் தொடரை கைப்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.
அதன்படி இங்கிலாந்து கவுண்டி அணிகளுடன் பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி விளையாடுவதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் பிசிசிஐ அணி கோரியது. பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்று கவுண்டி அணிகளுடன் இந்திய அணி பயிற்சியில் ஈடுபடுவதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் அனுமதி தந்துள்ளது.