
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதையடுத்து இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஹோவ்வில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு கியானா ஜோசப் மற்றும் கேப்டன் ஹீலி மேத்யூஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கியானா ஜோசப் 4 ரன்னிலும், ஹீலி மேத்யூஸ் 6 ரன்னிலும் என ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய ஸைதா ஜேம்ஸும் 6 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிட ஸ்டெஃபானி டெய்லரும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, பின்னர் ஜோடி சேர்ந்த ஷமைன் காம்பெல் மற்றும் ஷபிகா கஜ்னபி இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் ஷமைன் காம்பெல் 26 ரன்னிலும், சபிகா கஜ்னபி 22 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க அடுத்து களமிறங்கிய வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்களை மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் லாரன் பெல், சார்லி ஆர்லெட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.