
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் நான்காவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சமீபத்தில் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து ஒயிட்வாஷ் ஆனது.
அதேசமயம் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது. அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வரும் இரு அணிகளும் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் சில சாதனைகளைப் படைக்கும் வாய்ப்பினையும் பெற்றுள்ளார்.