இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆர்வத்தைக் கூட்டிவருகிறது. அதிலும் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி வீழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் 80 ரன்கள், இக்ரம் அலிகில் 58 ரன்களைச் சேர்க்க 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே ஆஃப்கனிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் இங்கிலாந்து அணி 40.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் ஹாரி ப்ரூக் மட்டும் 66 ரன்களைச் சேர்த்திருந்தார். ஆஃப்கானிஸ்தன் தரப்பில் அதிகபட்சமாக முஜீப் உர் ரஹ்மான் மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினர்.