
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியானது செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற நிலையில், அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் - ஜேமி ஸ்மித் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பென் டக்கெட் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழக்கம, அடுத்து களமிறங்கிய ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஜேமி ஸ்மித் - ஜோஸ் பட்லர் இணை இரண்டாவது விக்கெட்டிற்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் ஜேமி ஸ்மித் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஹாரி புரூக், டாம் பான்டன் ஆகியோரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும், மறுமுனையில் அபாரமாக விளையாடி வந்த ஜோஸ் பட்லர் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்ததுடன் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 96 ரன்களில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இறுதியில் ஜேக்கப் பெத்தல் 23 ரன்களைச் சேர்க்க, இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களைச் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக ரொமாரியோ ஷெஃபர்ட் 2 விக்கெட்டுகளையும், அல்ஸாரி ஜோசப், ஆண்ட்ரே ரஸல், ரோஸ்டன் சேஸ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.