
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி மௌண்ட் மாங்கனூவில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்து களமிறங்கியது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் ஜாக் கிராலி 4, பென் டக்கெட் 14 பவுண்டரிகளுடன் 84, ஆலி போப் 6 பவுண்டரிகளுடன் 42, ஜோ ரூட் 14 ரன்கள் சோ்த்தனா். அணியில் அதிகபட்சமாக ஹேரி புரூக் 15 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 89 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தாா். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 19, பென் ஃபோக்ஸ் 5 பவுண்டரிகளுடன் 38, ஸ்டூவா்ட் பிராட் 2, ஜேக் லீச்1 ரன்னுக்கு பெவிலியன் திரும்ப, 58.2 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 325 ரன்கள் சோ்த்திருந்த நிலையில் டிக்ளோ் செய்வதாக அறிவித்தது இங்கிலாந்து.
அப்போது ஒல்லி ராபின்சன் 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். நியூஸிலாந்து பௌலிங்கில் நீல் வாக்னா் 4, டிம் சௌதி, ஸ்காட் குக்கெலெஜன் ஆகியோா் தலா 2, பிளோ் டிக்னா் 1 விக்கெட் கைப்பற்றினா்.